Search this blog

Popular Posts

free counters

Followers

Loading...

முஸ்லிம் பெண்களின் உரிமையும் விவாகரத்து முறைமையும் - பகுதி [III]

பராமரிப்பு


திருமணம் ஒன்றினை உறுதிப்படுத்தற்கான அனைத்து நடவடிக்கைகளும் உறுதியிழக்கும் நிலையில் ஒரு பெண் வருத்தமுறுவதனை அவதானிக்கலாம். இந்நிலமை சில வேளை அவளது கருத்துக்களுக்கும், அபிலாசைகளுக்கும் மதிப்பளிக்காத ஒரு நிலமையாகவும் இருக்கும். இஸ்லாமிய சட்டம் ஓரு பெண்ணை நாகரீகமான வகையில் விடுவித்துக்கொள்ளும்படி பணிப்பதுடன் அவளை கௌரவமான முறையில் பராமரிக்குமாறும் வேண்டுகின்றது. இவை முஸ்லிம்கள் யாவருக்கும் பொதுவான சட்டங்களாகும். விவாகரத்தான பெண் ஒருத்திக்கு நியாயமான வகையில் பராமரிப்பு செலவினை வழங்குவதே முறையாகும்[1].

இஸ்லாமிய சட்டமானது விவாகரத்தான ஒரு பெண்ணின் மூன்று மாதவிடாய் காலம் (இத்தா காலம்) முடியும் வரையே பராமரிப்பு வழங்கப்பட வேண்டும் என எந்தவொரு வரையறையும் விதித்திருக்கவில்லை. ஆனாலும், இன்று முஸ்லிம் சமூகத்தில்இத்தா காலம் முடிந்ததற்கு மேலதிகமாக பராமரிப்பபுக்கான எந்தவொரு அவசியமும் கிடையாது, இவ்வாறாக பணிக்கவும் முடியாது’ எனும் வகையான வாதம் பிரபல்யம் பெற்று விளங்குவதனை காணலாம். பராமரிப்பு தொடர்பான நடவடிக்கையினை வரையறை செய்யும் வண்ணமான எந்தவொரு சட்ட ஏற்பாடுகளும் காணப்படவில்லை. அதாவது, சட்டம் பராமரிப்பு தொகையினையோ அல்லது அதற்கான கால அளவினையோ வரையறுக்கவில்லை[2].  

இங்கு பராமரிப்பு தொடர்பில் அல்குர்ஆனில் கையாளப்பட்டுள்ள மத-, -அருப்f எனும் இரு வகையான மூலச்சொற்களும் அல்குர்ஆன் விரிவுரையாளர் பலரினால் பல்வேறாக விரிவுரையாக்கம் செய்யப்பட்டுள்ளன. யூசுப் அலி அவர்கள் மத- என்பதனை 'பராமரிப்பு' எனவும், -அருப்f என்பதனை 'அளவான' எனவும் விளக்கியுள்ளார்[3]. முகம்மட் ஆஸாத் என்பவர் -தஆ என்பதற்கு 'பராமரிப்பு' எனவும், -அருப்f என்பதனை 'கௌரவமான வகையில்' எனவும் விளக்கியுள்ளார்[4]. மர்மதுக்கே பிக்தால் இதனை விரிவுரையாக்கம் மேற்கொள்கையில் 'மத-ஆஉன் பில்மஅருப்f' என்பதனை 'கனிவான முறையிலமைந்த பராமரிப்பு' எனக் குறிப்பெழுதுன்றார்[5]. இவ்வாறாக பராமரிப்பு தொடர்பிலான கருத்துக்கள் வேறுபடுவதனை காணலாம்.

ஆரம்ப கால சட்ட அறிஞர்கள் இத்தா காலம் முடியும் வரையே பராமரிப்பு வழங்கப்படல் வேண்டும் என்ற கருத்தினை கொண்டிருந்தனர். எனினும் மேற்கூறிய அல்குர்ஆன் வசனங்கள் குறிப்பிட்ட காலம் தொடர்பிலோ அல்லது பராமரிப்பின் வரையறை தொடர்பிலோ எந்தவகையான ஏற்பாடுகளையும் குறிப்பிடவில்லை. இதன் மூலம் இவை மனித தேவையின் நிமித்தமும், வேறுபடும் மனித வாழ்வின் அடிப்படைகளிலும் தங்கியிருக்கும் பொருட்டு விடப்பட்டுள்ளன என்பதனை நாம் புரிந்துகொள்ளலாம்.

பராமரிப்பு தொடர்பில் எதுவித வரையறைகளோ, மட்டுப்பாடுகளோ கிடையாது. அது ஒவ்வொருவரினதும் தேவை, உடற்பலம், பொருளாதார செழிப்பு என்பனவற்றினை பொறுத்து வேறுபடலாம். ஆனால் விவாகரத்து பெற்றவர் பராமரிப்பு என்ற கடப்பாட்டுடன் பிணைக்கப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஒருவர் தன் மனைவியினை போதுமான வகையில்  பராமரிக்க தவறுகையில் அவள் நீதிமன்றினூடாக தனது உரிமையினை நிலைநாட்டிக் கொள்ளலாம். இவ்வாறாக கோரப்படும் பராமரிப்பானது அவனது மனைவி என்ற நிலமையில் மட்டுமன்றி, விவாகரத்தின் பின்னரும் அவளுக்கு உரித்தானதாகும். இஸ்லாமிய சட்ட அறிஞரான அபூ யூசுப் அவர்கள் 'கணவன் தன் மனைவியினை விட்டுப்பிரிந்த பின்பும் அவளுக்கானவற்றை அளிக்க வேண்டும்' எனக்கூறுகின்ற அதேவேளை முஹம்மத் என்பவரது கருத்து இதற்கு மாற்றமானதாக உள்ளது. இவ்வாறான கருத்து நிலமைகளில் இருந்து, மனைவியினது பராமரிப்பினை வழங்காது நிறுத்துவது மிகவும் பலயீனமான ஒரு நிலமையாகும்.

கணவன் ஒருவன் தனது மனைவியினை விவாகரத்து செய்ய முற்படுவாரெனில் மேற்கண்ட வகையில் பராமரிப்பிற்கான கொடுப்பனவினை வழங்க தயாராதல் வேண்டும் என்பது இங்கு உட்கிடையாக வெளிப்படுகின்ற ஏற்பாடாக காணப்படுகின்றது. ஆயினும் இஸ்லாமிய சட்டமானது கணவன் மனைவி தமக்குள் விவாகரத்து மேற்கொள்வதனை ஒருபோதும் விரும்புவதில்லை. அவள் விவாகரத்தான பின்பும் அவளுக்கான கொடுப்பனவை முறையாக அளித்தல் வேண்டும். குறிப்பிட்ட காரணங்களின் விளைவாக, சில வேளை ஒரு திருமணம் அல்லது மேற்கொள்ளப்படும் விவாகரத்து முழுமை பெறாத நிலமை ஏற்படும். கணவன் ஒருவன் தான் அளித்த 'மஹர்' (Bridal money given by the husband to the life at the time of the marriage) தொகையில் பாதியளவை மட்டுமே விவாகரத்தின் போது பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் அத்தொகையினை கூட விட்டுவிடுவது சிறப்பானதென சட்டம் எடுத்துரைக்கின்றது. மஹர் தொகை அளிக்கப்படாத திருமணம் எவ்வகையிலும் வலிததாந் தன்மையினை பெறாது. தனது வசதி வாய்ப்புக்கு ஏற்ற விதத்திலும், தனது சம்பாத்தியத்தியத்திற்கும் செல்வத்திற்கும் தகுந்த வகையிலும், பாவனைக்கு உதவும் வகையிலுமான ஏதாவது ஒன்றை திருமணம் மேற்கொள்கையில் மணமகளுக்கு அளிப்பது மணமகனது கடமையாகும்

திருமண வாழ்வு பூர்த்தி பெறுகின்றவிடத்து, கணவன் அம்மஹர் தொகையில் பாதியளவு அல்லது அதற்கு கூடுதலாக தனது மனைவிக்கு அன்பளிப்பு செய்தல் வேணடும். மனைவியுடன் கனிவோடு நடந்து கொள்வதும், அவளை அன்பான முறையில் விடுவித்து கொள்வதும் அவசியம். அவளை மீள அழைத்துக்கொள்வது உடல் மற்றும் உள ரீதியில் துன்புறுத்தும் நோக்கிலமைந்து விடக்கூடாது. ஆனால் அவளுடன் மிக கனிவுடனும், போதுமான மதிப்புடனும், புகழுடனும் குடும்ப வாழ்வை நடாத்த வேண்டும். தனது மனைவியை விவாகரத்து மேற்கொள்ளும் நிலமை தோன்றினும் கூட, இத்தா காலம் முடியும் வரையான காலப்பகுதிக்கு கணவன் தனது சொந்த வீட்டிலேயே அவளை வைத்து பராமரிக்க வேண்டும். இவ்வேளை அவளது தராதரம், மேன்மை என்பன மதிக்கப்படுகின்றதா என்பதனை அதானிப்பது அவசியம். குறித்த மனைவி கர்ப்பவதியாயிருப்பாளாயின் குழந்தையின் பிறப்பு வரை அவள் கணவனது வீட்டிலேயே வைத்து பராமரிக்கப்படல் வேண்டும். குழந்தை பிறந்த பின்பும் கணவன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பானாயின், அவனது குழந்தைக்காக கவனிப்பு செலவு வழங்குவதனையும் புறக்கணிக்க முடியாது.

இவ்வாறாக, தலாக் முறைமை தொடர்பில் இஸ்லாமிய சட்டத்தில் குறித்துக் காட்டப்பட்டுள்ள ஏற்பாடுகள் யாவும் பெண்கள் சமூகத்திற்கு அதிக மதிப்பினை அளிப்பதாகவே காணப்படுகின்றன. அவள் எதுவித துன்புறுத்தல்களுக்கோ, உடல் உள ரீதியிலான கொடுமைப்படுத்தலுக்கோ உள்ளாக கூடாது என்பதில் இச்சட்டங்கள் மிகவும் கரிசனையாவுள்ளன என்பது திண்ணமாகும். பெண்களை அன்பான முறையில் திருமண பந்தத்தில் இருந்து விடுகை அளிப்பதன் மூலமாக உணர்வு ரீதியிலாக ஏற்படும் துன்புறுத்தல்கள் கூட ஓழிக்கப்படுகின்றன. ஆனாலும் துரதிட்டவசமான நிலமை யாதெனில் முஸ்லிம்களின் தற்கால நடைமுறை செயற்பாட்டிற்கும், இஸ்லாமிய சட்ட கருத்துக்களுக்குமிடையில் காணப்படும் பாரிய இடைவெளியாகும். முஸ்லிம்கள் இவை பற்றி அறியாமையாக தங்களை வளர்த்துக்கொண்டு செல்வதனையே இதன் காரணமாக அடையாளம் காண முடிகின்றது. எனவேதான், முஸ்லிம் பெண்கள் தமக்களிக்கப்பட்டுள்ள உரிமைகளை மிகவும் ஆழமாக அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இவை இன்றைய மேலைத்தேய சிந்தனைவாத போக்கில் இலகுவான காரியமல்லவாகவிருப்பினும், மிகவும் பெறுமதியும், பெரும் மதிப்பும் பெற்ற ஒன்றாகும் என்பதனை பெண்கள் சமுகம் மறந்து செயற்பட முடியாது.   



[1] The glorious Qur’an, Surat 02.Al-Baqarah,Verse No.240
[2]Abdullah Yusuf Ali, the Holy Qur’an (Hyderabad,n.d)Vol.I,p.63
[3]The glorious Qur’an, op.cit, Surat 02.Al-Baqarah, Verse No.241 and See Surat 04.An-Nisa, Verse No.12 also.
[4]Yusuf Ali, op.cit, Vol.I, p.63.
[5]Muhammad Asad, The message of the Qur’an, op.cit, p.54, f.n.231.
[6]See Mohd.Marmaduke Pickthall, Holy Qur’an (Delhi, 1980), p.44.
 
 

0 comments: