Search this blog

Popular Posts

free counters

Followers

Loading...

முஸ்லிம் பெண்களின் உரிமையும் விவாகரத்து முறைமையும் - பகுதி [II]


விவாகரத்து நடபடிமுறை (Thalaq Procedure)

தலாக் முறைமை பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:

"தலாக்கை இரு முறைதான் கூறலாம். பின்னும் (தவணைக்குள்) முறைப்படி தடுத்து (மனைவிகளாக) வைத்துக்கொள்ளலாம்; அல்லது (அவர்கள் மீது யாதொரு குற்றமும் சுமத்தாமல்) நன்றியுடன் விட்டுவிடலாம்..."[1]

இங்கு தெளிவாக காணப்படுகின்ற விடயம் தலாக் இரு முறை முன்மொழியப்பட முடியுமானது என்பதாகும். இந்நிலமையில் அவ்விவாகரத்து மீள (முடிவுறுத்திக் கொள்ள) முடியமான (Revocable) காணப்படுகின்றது. இதன் பின்னராக குறிப்பிட்ட எஞ்சிய காலத்தினுள் அம்மொழியப்பட்ட விவாகரத்தினை மீண்டும் வறிதாக்கிக் கொண்டு தம்பதிகள் ஒருங்கு சேர வழி வகைகளை மேற்கொள்ள முடியும். இஸ்லாமிய சட்டமானது அடிப்படையில் ஒரு ஆணினது பூரணபாதுகாப்பின் கீழ் தமது வாழ்வியலை ஒரு பெண் கொண்டு நடாத்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன. இதனால் இஸ்லாமிய சட்டத்தில் விவாகரத்து என்பது இரு முறை மட்டும் மொழியப்படக்கூடியதாயும், அவ்வாறின்றி மூன்றாம் முறையும் விவாகரத்தினை முன் மொழிவார்களாயின் அது மீள (முடிவுறுத்திக் கொள்ள) முடியாத [(Irrevocable) தம்பதிகள் இருவரும் சில நிபந்தனைகள் நிறைவேறாத வரை மீண்டும் கணவன் - மனைவி உறவினை கட்டிக்காக்க இயலாத] நிலைக்கு இட்டு செல்லும். இவ்வாறு விவாகரத்திற்கான மூன்றாவது மொழிவுகளும் நிறைவேறிய பின்னர், விவாகரத்தான பெண் வேறு ஒரு நபரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றாலே              ஒழிய, முந்திய கணவன் அவளை மீள திருமண பந்தத்தில் இணைத்துக் கொள்ள முடியாது. இச்ந்தர்ப்பத்தில் மாத்திரமே ஒருத்தி தனது முந்திய கணவனை மீண்டும்  திருமணம் மேற்கொள்ள முடியும். இவ்வாறான மிகவும் இறுக்கமான நிலமை இஸ்லாமிய சட்டத்தில் உள்ளாக்கம் பெற்றிருக்க காரணம் விவாகம், விவாகரத்து தொடர்பாக மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகத்தினை தடுத்து நிறுத்துவதற்காகவாகும்.

கணவன் ஒருவன் மூன்றாவது முறையும் மொழிவதென்பது விவாகரத்திற்கான அறுதியும், இறுதியுமான  நிலமையினை வெளிப்படுத்துகின்றது. எனிலும் விவாகரத்திற்கான மொழிவுகள் மூன்றும் ஒரே தடவையில் மேற்கொள்ளப்பட வேண்டுமா? அல்லது வெவ்வேறான சந்தர்ப்பங்களில் இடம்பெற வேண்டுமா? என்பது தற்போது நடைமுறையில் காணப்படுகின்ற பிரச்சினையாகும். விவாகரத்திற்கான மொழிவுகள் மூன்றும் ஒரே தடவையில் இடம்பெறுவதும், மீண்டும் அப்பெண் வேறு ஒரு நபருடன் திருமண உறவுகொண்டு வாழ்ந்து விவாகரத்து செய்த பின்பே மீள முந்திய கணவனால் அவளுடன் மண வாழ்வில் ஈடுபடமுடியும் என்பதும் இன்று எமது காழி நீதிமன்றுகளில் (Quazhi) காணப்படுகின்ற வழக்கமான நடைமுறையாகிவிட்டது. இந்நிலமை காழி நீதிபதிகள் பக்கச்சார்பாகவும், நடுநிலமை அற்றவர்களாயும் செயற்படவும், அதேவேளை இலகுவாக விவாக துஷ்பிரயோக நிகழ்ச்சி நிரல்களை கணவான்கள் மேற்கொள்ளவும் உறுதுணையாயமைகின்றது.

மேலும், இஸ்லாமிய சட்டத்தினால் மிகவும் இறுக்கமானதாயும், வெறுப்பானதாயும் கருதப்படுகின்ற விவாகரத்தினை, முஸ்லிம்கள் மத்தியில் இன்று மிகவும் சகாய நிலையில் பெற்றுக்கொடுக்கவல்ல ஒரு வாய்ப்பான சந்தையாக காழி நீதிமன்றுகள் குறிப்பிடத்தக்க இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளன எனலாம். காரணம், நியமிக்கப்படுகின்ற நீதிபதிகள் நாட்டின் முஸ்லிம் சட்டத்தினுடைய உள்ளடக்கங்களினை சரியான வகையில் விளங்கிக்கொள்ளாதவர்களாயும், மேலும் முஸ்லிம் சட்டம் தொடர்பிலும், அவை தொடர்பிலுள்ள இஸ்லாமிய சட்ட நிலமை குறித்தும் போதிய பயிற்சியோ, அறிவோ அற்றவர்களாகவும் அவர்கள் காணப்படுகின்றனர். இவை காழி நீதிபதிகள் தெரிவுசெய்யப்படுகின்ற முறைமைகளில் உள்ள வழுக்களாக காணப்படுகின்றன.       
பொதுவாக, விவாகரத்து பெற்ற ஒரு பெண் குறித்த 'இத்தா'  காலம் முடிவடைந்த பின் மீண்டும் ஒருவருடன் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளலாம். விவாகரத்தான பெண் வேறு ஒருவரை மணந்து, அம்மனிதராலும் மீண்டும் விவாகரத்து பெற்றாள் எனில், அக்குறித்த பெண் பிந்திய கணவனுடன் உடலுறவு கொண்டிராத வரை, தனது முந்திய கணவனை மீண்டும் மணம் முடிக்க இயலாது[2]. இந்நிலமை முந்தய கணவனுடன் மீண்டும் பந்தத்தில் இணைவதாக இருப்பின் காணப்படுகின்ற நிபந்தனைகளாகும்

தற்கால சூழ்நிலையில், விவாகரத்திற்கான மொழிவுகள் மூன்றும் ஒரே தடவையில் மேற்கொள்ளப்பட வேண்டுமா? என்பது பற்றி பல்வேறுவகையான கருத்துக்கள் நிலவுகின்றன. மறுபுறமாக இஸ்லாமிய சட்டம் இவை தொடர்பில் தெளிவான விளக்கங்களை கொண்டுள்ளபோதும் கூட, இன்று எமது சமூகத்தில் காணப்படுகின்ற விவாகரத்துக்களுள் மிகவும் அதிமானவை இத்தகைய இஸ்லாமிய சட்டத்திற்கு மாற்றமான விவாகரத்து முறைமை கொண்டே கையாளப்படுகின்றன. இதனால் தற்காலத்தில் முஸ்லிம்கள் மத்தியில் விவாகரத்து மிகவும்   இலகுவான ஒரு விடயமாக நோக்கப்படும் அதேவேளை ஏனைய சமூகத்தவரினால் முஸ்லிம்களின் விவாகம் மற்றும் விவாகரத்து விடயங்கள் விமர்சனததிற்குரியதாயும் அமைந்துவிட்டது எனலாம். இந்நிலமை இவை தொடர்பில் இஸ்லாமிய சட்டம் கொண்டுள்ள எற்பாடுகளை முழுமையாக முறியடிப்பதாகவும், அதன் குறிக்கோள்களை அடைவதில் தடைகளை உண்டுபண்ணுகின்றனவாயும் அமைந்துவிடுகின்றன.

இஸ்லாமிய சட்டவியல் அறிஞர்கள் இதனை சட்டத்திற்கு மாற்றமான ஒரு செயற்பாடாகவே (Bab’al-Bid’ah) கருதுகின்றனர். இஸ்லாமிய சட்டவியலின் முக்கியத்துவம் பெற்ற  அறிஞர்களாக கருதப்படுகின்ற அபூ ஹனீபா(Hanafi Sect) மற்றும் மாலிக் (Malikii sect) என்போர் மூன்று மொழிவுகளையும் ஒரே தடவையில் மேற்கொள்வதனை சட்டத்திற்கு மாற்றமான ஒரு விடயமாக கருதுவதுடன், அனுமதிக்ககூடிய ஒரு விடயமல்ல எனவும் கூறுகின்றனர். பிரபல சட்ட அறிஞரான அஹ்மத் ஹன்பல் (Hanbali sect) அவர்களும் இக்கருத்துடன் உடன்படுகின்றார். ஆனாலும் இஸ்லாமிய சட்டவியலின் அடுத்த முக்கிய அறிஞராக கருதப்படுகின்ற ஷாபி (Shafii Sect) அவர்கள் இவ்வகையான விவாகரத்தினை அனுமதிப்பதுடன், அது கணவனின் உரிமை எனவும் குறிப்பிடுகின்றார். பொதுவாக நபி (ஸல்) அவர்களது காலப்பகுதியிலும் அவர்களது தோழர்களது காலப்பிரிவிலும் மூன்று மொழிவுகளையும் ஒரே தடவையில் மேற்கொண்டதற்கான எவ்வித சான்றுகளும் இல்லை. மாறாக, அவ்வாறு விவாகரத்திற்காக ஒரே தடவையில் மேற்கொள்ளப்படும் மூன்று மொழிவுகளும் ஒரு மொழிவாகவே கொள்ளப்பட்டது[3].  
 
அல்குர்ஆனில் எந்தவொரு இடத்திலும் இவ்வாறான செயற்பாடு குறித்து எடுத்துரைக்கப்படவில்லை என்பதோடு இஸ்லாமிய சட்டத்தில்  முடிவுறுத்தக்கூடிய விவாகரத்து [தலாக் ரஜ்- (Revocable)] வகையே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒரே தடவையில் மூன்று மொழிவுககளையும் மேற்கொள்ளவது பற்றியோ அல்லது தலாக் அல்- பத்தாஹ் எனும் வகை முறிக்க முடியாத (Irrevocable) விவாகரத்து பற்றியோ எவ்வித கருத்துக்களும் கூறப்படவில்லை. இவ்வாறு மூன்று மொழிவுகளும் ஒரே தடவையில் பிரயோகிக்கப்படினும் அதனை ஒத்த மொழிவாகவே கருத வேண்டும். கணவன் விவாகரத்தினை முறித்துக் கொண்டு மீண்டும் தனது மனைவியுடன் திருமண பந்தத்தில் இணைந்து வாழ உரிமையுள்ளவன் என்பது இங்கு முக்கியப்படுத்தப்படும் அம்சமாகும்[4].

மேற்போந்தவற்றிலிருந்து ஷாபி பிரிவினை தவிர்ந்த[5] ஏனைய பிரிவுகளினது சட்டவியலாளர்கள் மூன்று மொழிவுகளையும் ஒரே தடவையில் மேற்கொள்வதனை சரி காணவில்லை. பதின்நான்காம் நூற்றாண்டின் சிறந்த இஸ்லாமிய சட்ட கலை நிபுணரான இப்னு தைமிய்யா அவர்கள் கூட இவ்வகை விவாகரத்து முறை சட்ட வலிதுடமை பெறாது எனக் கூறுகின்றார்[6].

இஸ்லாமிய சட்ட ஏற்பாட்டின் கீழ் 'அல்-தலாகுல் மர்ரதானி' என்பதன் மூலம் தெளிவுபடுத்தப்படுவது 'ஒரு தடவையில் ஒரு தலாக்' என்பதாகும். 'ர்ரதானி' என்பதன் அடிச்சொல்லான 'மர்ரதம்' என்ற சொல் மூலம் (இரு முறை) அங்கு இரு தலாக் மொழிவுகளுக்குமிடையில் கால இடைவெளி இருப்பதனை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளலாம். எனவே, இரு மொழிவுகளையும் ஒரே தடவையில் மேற்கொள்ள முடியாது என்பது சட்டத்தின் பொருளாகும். ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு மொழிவே அமைதல் வேண்டும். இந்நிலமையில், பெண்களின் கணவான்கள் பின்னும் சமாதானத்தை விரும்பினால், அவர்களை மீண்டும் மனைவிகளாக திருப்பிக் கொள்ள கணவான்களுக்கு உரிமையுண்டு. ஆண்களுக்கு பெண்கள் மீதுள்ள உரிமை போன்றே பெண்களுக்கும் உண்டு[7]. இங்கு ஒருவர் தனது மனைவியின் நல்ல பல குணாம்சங்களை பற்றி சிந்திக்கவும் அவளது காதலை புரிந்துகொள்ளவும், அவளது அன்பின் ஊடாட்டங்களை நினைவு கூரவும் இஸ்லாமிய சட்டம் வாய்ப்பளிக்கின்றது.

மூன்று தடவை தலாக் மொழிவதற்கான எவ்வித ஆதாரங்களும் இஸ்லாமிய சட்டத்தில் தெளிவாக இல்லை. அதே சமயம், ஒவ்வொரு 'துஹ்ர்' காலப்பகுதியிலும் (மாதவிடாய்த் தவணைக்காலம்) தலாக் மொழிவு கூறப்படல் வேண்டும் என்பது முற்றிலும் பிழையான செயற்பாடாகும். பெண்ணின் மூன்று துஹ்ர் காலங்கள் முடிந்திருக்கும் வரைக்கும் ஒரு தலாக் மொழிவே மேற்கொள்ளப்பட்டிருக்கும். இங்கு துஹ்ர் காலங்கள் ஒவ்வொன்றிலும் தலாக்கிற்கான மொழிவு மேற்கொள்ளப்பட வேண்டும் எனும் அவசியமில்லை. விவாகரத்தினை பெற்ற பெண் மூன்று துஹ்ர் காலங்களுக்கு இத்தா (Iddah)[8] அனுட்டிக்க வேண்டும். இவ்வனுட்டனையின் பின்னர் அப்பெண் வேறு ஒரு திருமண ஒப்பந்தத்தினுள் நுளைய விரும்புவாளாயின், அவள் சுதந்திரமானவள். இதன் காரணமாக தலாக் மொழிவு ஒரு தடவை மாத்திரமே என்பதுடன், குறித்த துஹ்ர் கால(ங்கள்)ம் முடிவடைந்த பின்னர் மேலும் ஒரு தடவைக்கு மேலதிகமாக அது இருக்காது. இவ்வேளையில் இவர்கள் தமது மனங்களை உறுதியான முறையில் மாற்றிக்கொண்டு தங்களது உறவினை விலக்கிக்கொள்ள அல்லது, மீண்டும் ஒன்று பட்டு பரஸ்பரம் புரிந்துணர்வுடன் கூடிய அன்புமிக்க இல்லறத்தினை வாழ்வதற்கான சுமுகமான வழிவகைகளை தேடிக்கொள்ளலாம். இந்நடைமுறையே இஸ்லாமிய சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறையாகும்[9].

இதுவரை காலமும் எமது முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இன்றியமையாத ஒரு சட்டமாக இத்தலாக் முறைமை கருதப்பட்டு வருவதுடன் இதுவே இன்று அதிகமாக பிரயோகிக்கப்படுகின்ற ஒன்றாகவும் காணப்படுகின்றது. நாம் மிக நெடுகாலத்திற்கு இத்தலாக் மொழிவு முறையினை நடைமுறையில் கொண்டிருப்போமானால், அது பெண்கள் தொடர்பிலான பல அசௌகரியங்களுக்கு வழி சமைக்கும் என்பதில் ஐயமில்லை. இந்நடைமுறைகளினால் பெண்கள் சமூகத்திற்கு இளைக்கப்படும் பல்வேறுவகையிலான அநீதிகளினை நாம் இன்று நேரடியாக அவதானித்து வருகின்றோம். ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் அநீதியிளைக்கப்படுதற்கு காரணமாயுள்ள வழக்கத்திலுள்ள இத்தலாக் முறைமையானது மிகவும் தன்னிச்சையானதும், தவறான வழிக்கு இட்டுசெல்லக் கூடியதுமாகும். கணவனது அசமந்தமான போக்கின் காரணமாக, விளையாட்டாக கருதி அதன் தாற்பரியத்தினை உணராது, மன உளைச்சலினால் அல்லது கோப நிலைமை தணியாத வேளை மூன்று மொழிவுகளையும் ஒரே தடவையில் கூறுவாரானால், அப்பெண் மீள (முடிவறுத்திக்கொள்ள) முடியாத (Irrevocable) விவாகரத்தினை பெற்றுக்கொள்வாள். மேலும் கணவன் அறிவுள்ள நிலைக்கு திரும்பும் போது எதுவித கைங்கரியமும் மேற்கொள்ள ஏதுவில்லை. ஏனெனில் அத்தலாக் சட்ட தராதரம் பெற்றதாக கருதப்படுகின்றது. இதே நிலமையில் மனைவிக்கும் அநாதரவே கிட்டும்.

இவ்வாறான நிலமைகளின் போது, கணவன் விரும்பினாலும் குறித்த நிபந்தனைகள் நிறைவேறாத வரை அவளை மீள மனைவியாக்கிக் கொள்ள முடியாது[10]. இன்று எமது முஸ்லிம் சமுகத்தில் மிகப்பரவலாக நிகழ்கின்ற விடயம் யாதெனில் கணவான்களுக்கு அடிபணிய தவறிய அல்லது தவறுகின்ற மனைவியர்களை தண்டிக்க வேண்டும் என்ற நோக்கில் இத்தலாக் முறைமையினை அதிகமான கணவான்கள் பிரயோகித்து வருகின்றனர். இதுவே எமது முஸ்லிம் சட்டத்தின் வழுவாய் அமைந்துவிடுகின்றது. இஸ்லாமிய சட்டத்தில் விவாகரத்து தொடர்பான பிரயோகமானது, திருமணத்தில் மட்டுமன்றி விவாகரத்து தொடர்பிலும் பெண்களுக்கு சமமான வாய்ப்பும் தகுதியும் வழங்கப்படுவதிலேயே தங்கியுள்ளது.

                மேற்குறிப்பிட்டது போன்று, விவாகரத்து வழக்கொன்றில் மத்தியஸ்தம் நியமிக்கப்படுவதனை இஸ்லாமிய சட்டம் தேவைப்படுத்துகின்றது. வழக்கு தொடர்பான இறுதி தீர்மானத்தினை காழி நீதிபதி அல்லது காழி நீதிமன்று வெளியிடும். எவ்வாறாயினும், தற்கால சூழ்நிலையில் நிலமை வேறுபட்டதாக உள்ளது. விவாகரத்து தொடர்பில் முழுமையான கட்டுப்பாடு கணவான்கள் கொண்டுள்ளதாக கருதப்படுகின்றது. எந்தவொரு மனநிலையிலும், எந்தவொரு சூழ்நிலையிலும் அக்கணவன் வழக்கத்திலுள்ளது போன்று தலாக்,தலாக்,தலாக் என கூறுவதனூடாக தனது மனைவியினது வாழ்க்கைக்கு முத்திரை பொறித்துவிடுகின்றான். இத்தகைய மொழிதலுக்கு எதிரான எதுவித நிவாரணமுமின்றி அவள் கைவிடப்படுகின்ற நிலமையினை நாம் நடைமுறையில் அவதானிக்கின்றோம்.

இஸ்லாமிய சட்டமானது விவாகரத்தானது துஹ்ர் எனும் காலத்திலேயே வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றது. கடுமையான இவ்வலியுறுத்தலுக்கு காரணம், இந்நிலமையில் கணவன் தனது மனைவியுடன் உறவு கொள்ளக்கூடிய வாயப்புக்கள் அதிகம் என்பதுடன் இவை விவாகரத்திலிருந்து இருவரும் விடுபட்டுக்கொள்ள வாய்ப்பாயமையும் என்பதனாலாகும். பெண்ணின் மாதவிடாய் காலப்பகுதியில் கணவன் அவளை விட்டு உடலுறவில் தவிர்ந்து இருப்பதனால் விவாகரத்திற்கு அதிகமான வாய்ப்பு அங்கு காணப்படும். இது சாதாரண மனித அறிவிற்குட்பட்ட வியூகமாக இருப்பினும், இச்செயல் நிச்சயமாக விவாகரத்தினை தடுக்க வழிகோலுவதுடன் மனிதனின் இயற்கை சுபாவத்தினை கருத்திற்கொண்டதாக இச்சட்ட ஏற்பாடு காணப்படுகின்றது

பொதுவாக 'விவாகரத்தான பெண் மூன்று மாதவிடாய் தவணை காலத்திற்கு காத்திருக்க வேண்டும்'[11] என கூறப்பட இரு காரணங்கள் காணப்படுகின்றன. அப்பெண் கருவுற்றிருப்பின் அதனை இக்குறித்த காலப்பிரிவினுள் நிரூபணமாக்கிக்கொள்ளலாம். கணவன் மீள சமாதானமாக விரும்புவானாயின் அதற்கான போதுமான காலமாக இவை காணப்படும்[12]. இவை கூட மீள முடியாத விவாகரத்து (தலாக் அல்-பத்தா) அனுமதிக்கப்பட்ட ஒன்றல்ல என்பதற்கு சான்றாகும்.

ஆண்களை போன்றவாறே பெண்களும் இஸ்லாமிய சட்டத்தில் சமமானவர்களாக கருதப்படுகின்றனர். கணவன் மீள அவளை அழைக்கின்ற வேளை ஒரு பெண் மீண்டும் அவனோடு சேர்ந்து வாழ மறுப்பாளாயின், இத்தகைய அவளது விருப்பிற்கு மாற்றமாக அப்பெண் வலுக்கட்டாயப்படுத்தப்பட முடியாது. ஆரம்பத்தில் கணவன் ஒருவனுக்கு தனது மனைவியை மீண்டும் அழைத்துக் கொள்ள உரிமை வழங்கப்பட்டுள்ள வேளையிலும், அவ்வழைப்பை நிராகரிக்கும் உரிமையினை மனைவிக்கு வழங்கியுள்ளது. என்றாலும், தலாக் காலத்தின் பின்னர், மனைவி ஒருத்தி கணவனின் வேண்டுகோளின் பேரில் மீள சென்று அவளுடன் வாழ்க்கை நடாத்த விரும்புவாளாயின், அதனை தந்தையோ, சகோதரர்களோ, அல்லது ஏனைய அவளது குடும்பத்தவர்களோ நிராகரிக்கவியலாது[13]. இதனால் மனைவி ஒருத்தி தனது முந்தய கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக மீள செல்வதோ அல்லது அவ்வாறு செல்ல தனது எதிர்ப்பினை வெளிப்படுத்துவதோ, அவளது உரிமை தொடர்பில் பாதுகாப்பானதாகும். மாறாக அவள் கட்டாயப்படுத்தப்பட முடியாது. ஓவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அவளது உரிமை நிலைநாட்டப்படல் வேண்டும் என இஸ்லாமிய சட்டம் வலியுறுத்துகின்றது.

பொதுவாக ஆண்கள் பெண்கள் மீது அதிக உரிமைகளை கொண்டிருப்பினும், விவாகரத்து தொடர்பிலான சட்ட ஏற்பாடுகள் யாவும் அவர்களை அன்பாக நடத்துமாறே கூறுகின்றன[14]. இன்னும் கணவன் மரணித்த பின்பு கூட மனைவியினை வீட்டிலிருந்து வெளியேற்றக் கூடாது என வலியுறுத்துகின்றது. அவள் தனது கணவனது மரணத்தின் பின்னர், குறைந்தது ஒரு வருட காலத்திற்கு அக்கணவனது வீட்டில் வாழ உரிமையுடையவள் என அல்குர்ஆன் கூறுகின்றது[15].        

குறிப்பாக விவாகரத்து பெற்ற ஒரு பெண் இத்தாவுக்குரிய காலம் முடிவடைவதனுள் ஒரு ஆண் மகன் அவளை மணம் பேச முற்படலாம். இந்நிலமை அவளது மனதில் மாற்றங்களை கொண்டுவர இடமுண்டு. இதன் காரணமாகவே இஸ்லாமிய சட்டமானது, கணவன் விவாகரத்து செய்த பின்பு மூன்று மாத காலத்திற்கு தனது பராமரிப்பிலேயே வைத்துக்கொள்ளும்படி கட்டளையிடுகின்றது. ஆனாலும் குறித்த மூன்று மாத காலம் நிறைவுறுத்தப்பட்ட பின்பு அவள் தனக்கான வேறு ஒரு கரத்தினை பற்றிக்கொள்ள எந்த தடையும் கிடையாது. எனவே இச்சட்ட ஏற்பாட்டினை சமூக நோக்கில் அவதானிக்கும் போது, இங்கு பெண்களின் உரிமை தொடர்பில் அதிக அளுத்தம் விடுக்கப்பட்டிருப்பது தெளிவானதாகும்.

தொடரும்...


[1] The Glorious Qur’an, Surat 02.Verse No.229
[2] Sahih Al-Bukhari, Vol.III,(Lahore,1980), Bab-al-Talaq,p.134
[3]  Imam Hajar Al-Asqalani, Bulugh al-maram, op.cit, pp.314-15.
[4] Fatwa Ibn Taymiyyah. (Cairo, n.d), Vol.III, p.22 and see further Ighathath al- Lahfan (Egypt, 1961), Vol.I, p.308.
[5] Muhammad Hussain Haykal, al- faruq’umar, (Cairo, 1364 A.H.), Vol.II, pp.225-83.
[6] Maulana ‘Umar Ahmad Usmani, Fiqh al-Quran, (Karachi, 1980), Vol.I, p.533.
[7] The Holy Qur’an, English Translation of the meaning and Commentary, Revised and Edited by The presidency of Islamic Researches, IFTA, verse No.228, f.n.254-55.
[8] Prescribed waiting period for woman after divorce or death of her husband, after the expiry of which she can remarry another person. And see Surat (65) At-talaq and further more Sahih Al-Bukhary, vol.VII, Hadith No.178.
[9] Fiqh al-Qur’an, op.cit, Vol.II, pp.220-1.
[10] The Holey Qur’an, English translation of the meanings and Commentary, op.cit, Surat.02, Verse No.230., f.n.260.
[11] The glorious Qur’an, Surat 65.At-Talaq,Verse No.01 and Surat 02.Al-Baqarah,Verse No.228  
[12] The Holy Qur’an, English translation of the meanings and Commentary, op.cit, Verse No.231, f.n.261.
[13] The glorious Qur’an, Surat 02.Al-Baqarah, Verse No.232 and see Maulana Muhammad Ali, Holy Qur’an, op.cit, p.100, f.n.306.
[14] The glorious Qur’an, Surat 65.At-Talaq, op.cit, Verse No.1-2, 6-7.
[15] Ibid, Surat 02.Al-Baqarah,Verse No.240